சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (21.07.2024) காலை-09 மணிக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயத்தின் கல்யாண மண்டபத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
சான்றிதழ் வழங்கல், எழுத்தாளர் விருது வழங்கல், பவளவிழா - மணிவிழா கௌரவங்கள், தமிழ் - ஆங்கில நூல்கள் வெளியீடு, சாதித்த மாணவிகளுக்கான பரிசில்கள் என நிகழ்வு முழுவதுமே பஞ்சாமிர்த அரங்க நிகழ்வாக இடம்பெற்றது.
விருந்தினர்களை ஆராத்தி எடுத்து பூக்கொடுத்து வரவேற்றதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
தீர்மானம் எடுத்தல் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கான பெயர்களை சோலைக்குயில் அவைக்காற்று களத்தின் தலைவரும் ஆசிரியருமான கோகிலா மகேந்திரன் அவர்கள் வாசிக்க சான்றிதழ்களை பிரதம விருந்தினர் பேராசிரியர் கனகசபை சிவபாலன் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து கோகிலா மகேந்திரன் எழுதி சாவித்திரி உமாமகேஸ்வரன் மொழிபெயர்த்த Decline and Recovery ஆங்கில நூல் தொடர்பான அறிமுக உரையினை யாழ். பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்கைகள் பீடத்தின் முன்னாள் தலைவரான கலாநிதி கருணாதேவி சிவாஜி அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து நூலின் மொழிபெயர்ப்பாளர் சாவித்திரி உமாமகேஸ்வரனுக்கான கௌரவத்தினை கலாநிதி கருணாதேவி சிவாஜி அவர்களும் புனிதவதி சண்முகலிங்கன் அவர்களும் வழங்கினர். ஆங்கில நூலினை சாவித்திரி உமாமகேஸ்வரன் வெளியிட முதற்பிரதியினை ஓய்வுநிலை விரிவுரையாளரான இந்திரமதி ராமச்சந்திரா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வின் இடையிடையே தண்பதப் பெருவழி நூலை எழுதிய சோலைக்குயில்களின் கதைகள் தொடர்பிலான கருப்பொருளை கதையை எழுதியவரே கூற அதற்கான அரங்க செயற்பாடும் பின்னணியில் இடம்பெற்றது.
தொடர்ந்து விழிசைச் சிவம் இலக்கிய விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. மூத்த எழுத்தாளர் ஐ. சாந்தன், மூத்த ஊடகவியலாளர் இ.பாரதி, எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான க. தணிகாசலம் மற்றும் சோலைக்குயில் இசைக்கலைஞர் விருது பெறும் மூத்த ஆசிரியர் விமலாதேவி நாகேஸ்வரன் ஆகியோருக்கான கௌரவங்களையும் விருதுகளினையும் பேராசிரியர் கனகசபை சிவபாலன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவகெங்கா சுதீஷ்னர், வைத்தியர் கயமளா சிவமோகன் மற்றும் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் அதிபர் பொன்னையா அரவிந்தன் ஆகியோரும் வழங்கி வைத்தனர்.
பவளவிழா கௌரவம் பெறும் திரு கிருஷ்ணர் மகேந்திரராஜா மற்றும் மணிவிழா கௌரவம் பெறும் திரு ச. கருணாகரன் அவர்களுக்கான கௌரவங்களினை பேராசிரியர் கனகசபை சிவபாலன், பொன்னையா அரவிந்தன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
தொடர்ந்து சோலைக்குயில் மாணவ சாதனையாளர்களான செல்வி மதுவந்தி மயூரன், செல்வி கனிமொழி கணேசானந்தன் ஆகியோருக்கான பரிசில்களை பிரதேச செயலாளர் திருமதி சிவகெங்கா சுதீஷ்னர் அவர்கள் வழங்கி வைத்தார். தொடர்ந்து அவரது உரையும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் கனகசபை சிவபாலன் அவர்களின் பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது.
சோலைக்குயில்களின் நூலான தண்பதப் பெருவழி நூலினை பேராசிரியர் கனகசபை சிவபாலன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை திருமதி வ. மயூரன் தம்பதியினர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து நூல் அறிமுக உரையினை ராஜி கெங்காதரன் அவர்கள் நிகழ்த்தினார்.
அரங்க நெறியாள்கையினை கோகிலா மகேந்திரன் அவர்கள் சிறப்பாக வடிவமைத்திருந்தார். சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் கீதத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.