வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழாவை முன்னிட்டுப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் நன்மை கருதிக் கதிர்காமத்திற்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப் பாதை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.06.2024) காலை-06 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கலந்து கொண்டு காட்டுப் பாதையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உகந்தை முருகன் ஆலயப் பிரதமகுரு, சிவாச்சாரியார்கள் மற்றும் பெருமளவு பாத யாத்திரிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் காட்டுப் பாதையில் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த காட்டுப்பாதை ஜீன் மாதம்-30 ஆம் திகதி பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டு ஜூலை மாதம்-11 ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்டச் செயலர் தலைமையில் கடந்த-07 ஆம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கதிர்காமம் ஆலயத்தில் கடந்த-12 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தில் காட்டுப் பாதை திறக்கும் திகதி பிற்போடப்பட்டு ஜூலை மாதம்- 02 ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டு 14 ஆம் திகதி மூடப்படவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட் டது. திகதி மாற்றம் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையில் கிழக்கைச் சேர்ந்த இந்து அமைப்புக்களின் கூட்டான கோரிக்கை, பாத யாத்திரிகர்களின் கோரிக்கையின் பிரகாரம் முன்னர் தீர்மானிக்கப்பட்டவாறே காட்டுப் பாதை திறக்கப்பட்டமை கதிர்காமக் கந்தன் யாத்திரிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.