யாழில் சைவ அறங்காவல் முழுநாள் கருத்தரங்கு

                                     

மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூசையை முன்னிட்டுத் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும், சைவநீதி அமைப்பும் இணைந்து நடாத்திய சைவ அறங்காவல் எனும் தொனிப்பொருளிலான முழுநாள் கருத்தரங்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை (13.07.2024) காலை-09 மணி தொடக்கம் மாலை-06 மணி வரை யாழ்ப்பாணத்திலுள்ள  வலம்புரி நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.



தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் இளம் புலவர் ஜீவா சஜீவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கையில் சைவம் அன்றும் இன்றும் எனும் தலைப்பில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசனும், சைவத்தின் சமகாலச் செல்நெறி - சில அவதானிப்புக்கள் எனும் தலைப்பில் கொழும்பு ஆறுமுகநாவலர் சபையின் செயலாளர் மருத்துவர் கி.பிரதாபனும், திருமுறைச் சிறப்பும் சாத்திரச் சிறப்பும் எனும் தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் கி.சிவகுமாரும், சைவ அறங்காவல் எனும் தலைப்பில் தென்னாடு அமைப்பின் நிறுவுனர் பொறியியலாளர் குணரத்தினம் பார்த்தீபனும், திருமுறை மகத்துவம் எனும் தலைப்பில் சைவநீதி அமைப்பின் தலைவர் குணா துரைசிங்கமும் கருத்துரைகளை நிகழ்த்தினர்.

இந் நிகழ்வில் வடக்கு,கிழக்கு , மலையகம், கொழும்பு என இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர்கள் பங்குபற்றிப் பயன்பெற்றனர். நிகழ்வில் தருமபுரம் ஆதீனத்தின் திருக்கேதீச்சரக் கிளைமடக் கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் மீனாட்சிசுந்தர தம்பிரான் சுவாமிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.