தமிழ்நாட்டில் நாங்கள் ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறோம். ஆனால், யாழ்ப்பாணத்துத் தமிழ் எவ்வளவு இனிமையானது! எனத் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் எஸ்.ராஜா புகழ்மாலை சூட்டியுள்ளார்.
அரியாலை சனசமூக நிலையத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு மாபெரும் இலக்கிய விழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (19.07.2024) இரவு அரியாலை சனசமூக நிலையத்தின் திறந்தவெளி அரங்கில் இடம்பெற்ற போது பட்டிமன்ற நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல கலப்புக்கள் எமக்குள் வருகின்றன. இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்துத் தமிழுக்குள் மொழிக் கலப்பு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். மொழிக் கலப்பு வந்துவிட்டால் அடையாளங்கள் கெட்டுவிடும் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.