யாழ். வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் திடீரெனத் தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் இன்று சனிக்கிழமை (13.07.2024) மதியம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பிக்கொண்டு வீதியில் முச்சக்கர வண்டியை குறித்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் செலுத்திச் சென்று கொண்டிருந்த போது திடீரென வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சாரதி வீதியில் தூக்கி வீசப்பட்ட போதிலும் ச் சிறுகாயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
எனினும், முச்சக்கரவண்டி தீப் பற்றி எரிந்தது.வீதியால் சென்றவர்கள் தீயினை அணைக்க முயன்ற போதும் அது பயனளிக்காத நிலையில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நெல்லியடிப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.