அன்றைய காலத்தில் கூடிக் களித்து ஆடிப்பிறப்புக் கொண்டாடினோம்: மூத்த எழுத்தாளர் ஆதங்கம்!

 

நாங்கள் கற்கும் காலத்தில் எப்படி தைப்பொங்கல், தீபாவளி, சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடினோமோ அவ்வாறே ஆடிப்பிறப்பை ஒரு பண்டிகையாகக் கொண்டாடினோம். அன்றைய காலத்தில் ஆடிப்பிறப்புப் பண்டிகை என்றால் பாடசாலைகளில் அரைநேர விடுமுறை  விடுவார்கள். நாங்கள் வீடுகளுக்குச் சென்றால் பெற்றோர்கள் அடிக் கூழ் காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து வைத்திருப்பார்கள். வீடுகளில் பெற்றோர்கள், பிள்ளைகள், உறவுகள் இணைந்து ஒன்றாகக் கூழ் குடித்து, கொழுக்கட்டை உண்டு கூடிக் களித்து ஆடிப்பிறப்பைக் கொண்டாடிய அந்தக் காலங்கள் என்றென்றும் மறக்க முடியாதவை என மூத்த எழுத்தாளரும், விமர்சகருமான மு.ஈழத்தமிழ்மணி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

சோமசுந்தர ஞானத் தமிழ்மன்றத்தின் ஏற்பாட்டில் சைவத்தமிழ் மக்களின் பண்டிகைகளின் ஒன்றான ஆடிப்பிறப்புக் கொண்டாட்ட நிகழ்வு ஆடிப்பிறப்பு நாளான இன்று புதன்கிழமை (17.07.2024) யாழ்.நகரில் அமைந்துள்ள  தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவச் சிலையடியில் சிறப்பாக இடம்பெற்ற போது கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.