வெறுமனே எல்லைகளை மாற்றியமைப்பதால் இந்தியா தன்னைப் பாதுகாக்க முடியாது: கஜேந்திரன் எம்பி காட்டம்!

இலங்கை அரசியல் அமைப்பில் ஒரு முழுமையான மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழ்த்தேசமும், சிங்கள தேசமும் சமத்துவம் என்ற அடிப்படையிலான சமஷ்டி அரசியல் கட்டமைப்பு முறைமை கொண்டு வரப்பட வேண்டும். அந்தச் சமஷ்டி அரசியல் கட்டமைப்பில் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கின்ற போது தமிழ்த்தேசத்தின் அனுமதி இல்லாமல் தென்பகுதி ஒரு வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிக்க முடியாதவாறான ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும். இதனை விடுத்து வெறுமனே எல்லைகளை மாத்திரம் மாற்றியமைப்பதன் மூலம் இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பதை நாம் பொறுப்புணர்வுடன் தெரிவித்துக் கொள்வதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.                    

கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (30.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.    

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கச்சதீவை மீள இந்தியா பெற்றுக் கொள்தல் என்ற அடிப்படையில் அல்லாமல் எல்லைகளைப் புதிதாக அமைத்துக் கொள்தல் என்ற அடிப்படையில் இந்தியா- இலங்கை இடையில் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அறியக் கூடியதாகவுள்ளது. அவ்வாறானதொரு முயற்சி இடம்பெற்றிருந்தால் அது இந்த நாட்டுக்கு ரணில் அரசு செய்கின்ற மிகப் பெரும் துரோகமாக அமையும். தமிழ்த்தேசமும் இலங்கையின் ஒரு பகுதியாகக் காணப்படும் நிலையில் எங்கள் தேசத்தின் ஒரு பகுதியை இந்தியாவுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு ஒருபோதும் இணங்க முடியாது. இவ்வாறான செயற்பாடு நடந்திருந்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு  உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும்.      

இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இவ்வாறான உடன்பாடுகள் அணுகுமுறை கிடையாது. கச்சதீவு தமிழ்த்தேசத்தின் கடற்பகுதியாகக் காணப்படும் நிலையில் இந்தப் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதும் ஒரு அத்துமீறிய செயற்பாடு. வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசத்துக்குச் சொந்தமான கடல் எல்லைகளை எங்கள் அனுமதி இல்லாமல் பெற்றுக் கொள்வது தமிழ்மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரும் துரோகம் என்பதை இந்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.  1980 ஆம் ஆண்டில் தமிழ்மக்களுக்குத் தமிழ் ஈழம் பெற்றுத்  தருவோம் என்று கூறித் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து விட்டு இலங்கையை அடிபணிய வைத்து உங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டு எங்களை முற்றுமுழுதாக கைவிட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தமிழ்மக்களின் நலன்களைப் பலியிட்டுத் தங்கள் நலன்களை அடையும் எண்ணத்தை இந்தியா கைவிட வேண்டும். 

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இதனை ஒரு அணுகுமுறையாக இந்தியா கைக்கொள்ளுமாக விருந்தால் அது ஒரு அடிமுட்டாள்தனமான செயற்பாடாகத் தான் அமையும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.