சர்ச்சைக்குரிய உடுப்பிட்டி மதுபானசாலை வழக்கு: எதிராளிக்குப் பிடியாணை!

பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி உடுப்பிட்டி இமையாணன் மேற்குப் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மதுபானசாலை தொடர்பாகக் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை (24.07.2024) மீளவும் எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிராளிக்குப் பிடியாணை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த தவணையின் போது எதிராளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தனர். இந் நிலையில் தீர்ப்பிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. வழக்கு கடந்த புதன்கிழமையன்று தீர்ப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிராளி மன்றிற்குச் சமூகமளிக்காமையால் நீதிபதியால் அவருக்கு எதிராகப்  பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் அடுத்த மாதம்-07 ஆம் திகதி வரை வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதேவேளை, மேற்படி மதுபானசாலை பொதுத் தொல்லையாகக் காணப்படுவதாகத் தெரிவித்துப் பிரதேச சமூகமட்ட அமைப்புக்கள் இணைந்து தாக்கல் செய்த மற்றொரு வழக்கும் பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.