சர்ச்சைக்குரிய ஆவணப் புத்தகம் வெளியீடு: ஏழாலை ஜொனியன்ஸ் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் அனைவரும் பதவி விலகியமையால் பரபரப்பு!

 


"காலம் அரித்திடாத மூலம் காத்திடுவோம்"  எனும் தலைப்பில் ஏழாலைக் கிராமத்தின்   சூராவத்தை, விழிசிட்டி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி ஜொனியன்ஸ் கூட்டமைப்பு- பிரான்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் சர்ச்சைக்குரிய ஆவணப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை (27.07.2024) ஏழாலை சூராவத்தை அம்மன் கோவில் ஆலய முன்றலில் நடைபெற்றது.

இந்நிலையில் மேற்படி நிகழ்வு ஆரம்பித்துச் சில நிமிடங்களில் ஜொனியன்ஸ் சனசமூக நிலைய நிர்வாகத்தவர்களும், கிராமத்தவர்கள் பலரும் இணைந்து நிகழ்விடத்தை நோக்கிச் சென்றுள்ளனர். இதன்போது ஜொனியஸ் சனசமூக நிலையம் தொடர்பாக ஆவணப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளை ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்தும், ஜொனியன்ஸ் கூட்டமைப்பு- பிரான்ஸின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டும் தமது நிர்வாகத்தவர்கள் அனைவரும் ஒன்றாகப் பதவி விலகுவதாக மேற்படி நிகழ்வில் உத்தியோக பூர்வமாக அறிவித்தனர். இதன்போது தாம் விலகுவதற்கான காரணங்களையும் தெரியப்படுத்தினர். நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட  வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யோ.திவாகரிடம்  தமது பதவி விலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்து நிர்வாகசபையின் அனைத்து உறுப்பினர்களும் கூண்டோடு பதவி விலகினர்.


இதன்பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வு தொடர்ந்தும் நடைபெற்றது. சூராவத்தைப் பகுதி இளைஞர்களின் பெரும் பங்கேற்புடன் சிறப்பான முறையில் செயற்பட்டு வந்த ஜொனியன்ஸ் சனசமூக நிலைய நிர்வாகத்தவர்கள் ஒரே தடவையில் பதவி விலகிய சம்பவம் ஏழாலை சூராவத்தைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சனசமூக நிலைய நிர்வாகத்தவர்களும், பொதுமக்களும் மேற்படி நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகில் ஒன்றுகூடி நிற்பதாகச் சுன்னாகம் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அப் பகுதிக்கு வருகை தந்து பெரும் குழப்பங்கள் ஏற்படாதவாறு தொடர் கண்காணிப்புப் பணியில்  ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.