வெப்பச் சலனம் மற்றும் காற்று வேக மாறுபாடு காரணமாக எதிர்வரும்-14 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உள் நிலப்பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் சற்றுக் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் மற்றும் சிறுதானிய பயிர்களை அறுவடை செய்பவர்கள் மழை தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். மேலும் வெப்பச் சலனச் செயற்பாடு காரணமாக இந்த மழை கிடைக்கும் என்பதனால் இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.