'அன்னதானக் கந்தன்' எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (18.08.2024) சிறப்பாகவும், மிகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
நேற்றுக் காலை-07 மணிக்கு விசேட அபிஷேகம் ஆரம்பமானது. வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வேற் பெருமான், விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் உள்வீதி உலா வந்து முத்தேர்களில் ஆரோகணித்தனர்.
சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு விசேட தீபாராதனை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷங்கள் முழங்க முற்பகல்-10 மணியளவில் முத்தேர்களின் பவனி ஆரம்பமாகியது. முத் தேர்களும் முற்பகல்-10.30 மணியளவில் இருப்பிடம் சென்றடடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை செய்தும், பல வகையான காவடிகள் எடுத்தும், பல பெண் அடியவர்கள் அடியளித்தும், பாற்காவடிகள், கற்பூரச் சட்டிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றினர்.
தேர்த் திருவிழாவை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரமம் உள்ளிட்ட ஆலயச் சூழலில் அமைந்துள்ள பல்வேறு மடங்களிலும் அடியவர்களுக்கு விசேட அன்னதானம் வழங்கப்பட்டதுடன் ஆலயச் சூழல், அதனை அண்டிய பகுதிகள் மற்றும் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு அடியவர்களின் தாகம் தீர்க்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் பருத்தித்துறை நகரம் மற்றும் யாழ்.நகரத்திலிருந்து விசேட சேவையில் ஈடுபட்டன.
இதேவேளை, மேற்படி ஆலயத் தேர்த் திருவிழாவில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)