சங்கிலியன் சிலைக்கருகில் இடம்பெறும் வர்த்தக சந்தையில் மக்கள் பங்கேற்பு குறைவு - முயற்சியாளர்கள் கவலை

 


யாழ்ப்பாணம் - நல்லூர் முருகன் மகோற்சவப் பெருவிழா காலத்தில் யாழ். மாவட்ட சிறுதொழில் முயற்சியாளர் சங்கத்தினால் நடாத்தப்படும் மாபெரும் வர்த்தக சந்தையும் ஆரம்பமானது. 

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஒழுங்கமைப்புடனும், யாழ். மாநகரசபையின் ஒத்துழைப்புடனும் இடம்பெறும் இச்சந்தையானது நல்லூர் சங்கிலியன் சிலைக்கருகில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. 

 தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறும் குறித்த கண்காட்சி நல்லூர் மகோற்சவகாலம் முடியும் வரை 25 தினங்களும் இடம்பெறும். 

யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு உற்பத்தியாளர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். 

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், ஆடை வகைகள், பாடசாலை பைகள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப்பொருள்கள், சத்துமா வகைகள், உள்ளூர் சவர்க்கார வகைகள், பூங்கன்றுகள்   போன்ற பல்வேறு பொருள்களையும்  சந்தையில் காட்சிப்படுத்தியுள்ளனர். 

போதிய விளம்பரப்படுத்தல்கள் இன்மை மற்றும் ஆலயத்திலிருந்து தூரம் காரணமாகவும் மக்கள் வருகை குறைவாக உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர். 


நல்லூர் முருகனை நாடி வரும் மக்கள் ஒருமுறையேனும் இந்தக் காட்சிக் கூடங்களுக்கு விஜயம் செய்து உள்ளூர் உற்பத்திப் பொருள்களை வாங்கி தங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 


கண்காட்சி இடம்பெறும் வாயிலுக்கு அருகில் தமிழர் பாரம்பரிய கூத்துகள், நடன நிகழ்வுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.