'அபிஷேகக் கந்தன்' எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயக் காம்யோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நாளை சனிக்கிழமை (03.08.2024) சிறப்பாக நடைபெறவுள்ளது.
நாளை அதிகாலை-03.30 மணியளவில் உஷக் காலப் பூசை, அதிகாலை-04 மணியளவில் 108 சங்காபிஷேகம், அதிகாலை- 05.30 மணியளவில் காலைச் சந்திப் பூசை என்பன இடம்பெறும். காலை-06.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து மாவைக் கந்தப் பெருமான் சித்திரத் தேரை நோக்கித் திரு நடனத்துடன் சென்று ஆரோகணிப்பார். காலை-08.45 மணியளவில் சித்திரத் தேர் வீதி உலா ஆரம்பமாகும். முற்பகல்-11.30 மணியளவில் சித்திரத் தேர் இருப்பிடம் சென்றடையும். நாளை மாலை-03.30 மணியளவில் மாவைக் கந்தப் பெருமான் சித்திரத் தேரிலிருந்து அவரோகணம் செய்யும் திருக்காட்சி இடம்பெறுமென மாவை ஆதீன கர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.