நீண்டகாலத்தின் பின் யாழ்.மண்ணில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த முதலாவது தமிழர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கலிங்கத்தின் 97 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நாளை சனிக்கிழமை (24.08.2024) மாலை-03 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராசா  தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றுவார். இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று  வெள்ளிக்கிழமை விமானம் மூலம் யாழ்.வருகை தந்துள்ளார்.

இந் நிகழ்வில் தென்னிந்தியத் திருச்சபையின் ஆயர் கலாநிதி. வி.பத்மதயாளன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துவார். 

நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

இதேவேளை, அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் இ.பேரின்பநாயகம் இதுதொடர்பில் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகத் தெரிவித்த கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.