வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவை முன்னிட்டு யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்துடன் இணைந்து வடக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு வழங்கும் தெய்வீக சுகானுபவம்-10 நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (18.08.2024) இரவு-07 மணி முதல் நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் இந்தியாவின் புகழ்பூத்த கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி.எஸ்.செளம்யா கலந்து கொண்டு பக்க வாத்திய சகிதம் தெய்வீக சுகானுபவம் இசைக் கச்சேரியை வழங்குவார். அத்துடன் இணுவையூர் குமரநர்த்தனாலயம் வழங்கும் கிராமியக் கலைக்கதம்பம் நடன நிகழ்வும் நடைபெறும்