வடமராட்சியில் பிரதேச சபையின் அனுமதியின்றி தொடர்ந்தும் கட்டப்பட்டு வந்த மதில்கள் இடித்தழிப்பு

 

யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி பிரதேச சபை) எல்லைக்கு உட்பட்ட  நெல்லியடி நகரம், கரணவாய் வடக்கு ஆகிய பிரதேசங்களில் இருவேறு காணி உரிமையாளர்களால் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி தொடர்ந்தும் கட்டப்பட்டு வந்த மதில்கள் இடித்தழிக்கப்பட்டுள்ளன. 


இன்று காலை 10.30 மணியளவில் கரணவாய் வடக்கு நவிண்டில் பிரதேசத்தில் உள்ள மதிலொன்றும் இடித்தழிக்கப்பட்டது.  


இதேவேளை இன்று மதியம் நெல்லியடி நகர பஸ் தரிப்பிடத்தின் பின்னால் உள்ள வீடொன்றின் மதிலும் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டதால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. 


சமீப காலமாக அனுமதி பெறாமல் கட்டிடங்கள், மதில்கள் கட்டப்பட்டு வருகின்றமை அதிகரித்து வருவதாகவும், இதனால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை காணப்படுவதாகவும், இதன் காரணமாக 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 49 ஆவது பிரிவுக்கு முரணாக தொடர்ந்தும் மதில்கள்  கட்டப்பட்டு  வந்த காரணத்தால் பிரிவு 52 க்கு அமைவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பிரதேச சபையினரால் கடந்த ஒரு வருடமாக நேரடியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு பல்வேறு கடிதங்களும் வழங்கப்பட்டு  வந்த நிலையிலும் அதனை மீறி தொடர்ந்து கட்டப்பட்ட காரணத்தினால் இவை இடித்தழிக்கப்பட்டதாக பிரதேச சபை தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இவ்விரு நடவடிக்கைகளும்  கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சனாதன் தலைமையில் இடம்பெற்றது. சம்பவ இடங்களில் கரவெட்டி பிரதேச சபையின் துறைசார் உத்தியோகத்தர்களும், நெல்லியடி பொலிசாரும் பிரசன்னமாகியிருந்தனர்.