வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் குரோதி வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் பதினெட்டாம் நாள் திருவிழாவான கார்த்திகை உற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை (26.08.2024) மாலை வெகு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
நேற்று மாலை-04.45 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள், கொடித்தம்பப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து உள்வீதி உலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார்த்திகைப் பூச்சப்பரத்தில் வள்ளி- தெய்வயானை நாயகியர் சமேதரராய் முத்துக்குமார சுவாமி வடிவினராக நல்லூர்க் கந்தப் பெருமான் ஆரோகணித்தார். அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷங்களுக்கு மத்தியில் மாலை-06 மணியளவில் கார்த்திகைப் பூச் சப்பரத் திருப் பவனி ஆரம்பமாகியது.
மந்த மாருதமான மாலை வேளையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய பூச் சப்பரத்தில் நல்லூர்க் கந்தப் பெருமான் பவனி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி. கார்த்திகைப் பூச் சப்பரம் இரவு-07.15 மணியளவில் மீண்டும் இருப்பிடத்தைச் சென்றடைந்தது. ஆயிரக்கணக்கான அடியவர்கள் கார்த்திகைத் திருப் பவனியில் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.