வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா தற்போது இடம்பெற்று வரும் நிலையில் ஆலயச் சுற்றாடலில் யாசகர்கள் பலரும் ஆலயத்திற்குச் செல்லும் யாசகர்களிடம் யாசகம் பெற்று வருகின்றனர்.
இந் நிலையில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகில் ஒரு கால் இழந்த நிலையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க யாசகர் ஒருவர் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துச் சென்று கொண்டிருந்த அடியவர்கள் பலரிடமும் தன் வாயால் கேட்டு யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். இந் நிலையில் இன்று பிற்பகல்-12.45 மணியளவில் வழிபாடு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரிடமும் யாசகம் கேட்கவே அந்த இளைஞனும் தன்னிடமிருந்த ஐந்து ரூபா நாணயத்தைக் குறித்த யாசகரிடம் வழங்கி விட்டுத் தன்னிடமிருந்த மேலும் இரண்டு ரூபாயை எடுத்து வழங்குவதற்கிடையில் அவர் ஏற்கனவே வழங்கிய ஐந்து ரூபா நாணயத்தைத் தூக்கி வீசியெறிந்துள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞன் யாசகன் வீசியெறிந்த பணத்தை எடுத்துக் கொண்டு யாசகனின் செயற்பாட்டிற்குத் தனது கடும் எதிர்ப்பையும் வெளிக்காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதேவேளை, குறித்த யாசகரின் செயற்பாட்டிற்கு அங்கு நின்றிருந்த ஏனைய அடியவர்கள் சிலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.