அரசியல் சாசனத்தில் இருக்கக் கூடிய 13 ஆவது திருத்தத்தை நான் நடைமுறைப்படுத்து வேன் எனச் சஜித் பிரேமதாச கூறுகிறார். இதே 13 ஆவது திருத்தத்தைப் பொலிஸ், காணி அதிகாரம் இல்லாமல் நடைமுறைப்படுத்த முயற்சிப்பேன் என ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். 13 ஆவது திருத்தத்தைத் தமிழ்மக்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் விரும்பினால் நான் அதனை நடைமுறைப்படுத்துவேன் என அனுரகுமார திஸாநாயக்கா கூறுகிறார். இதனைத் தவிர இவர்கள் மூவரும் தமிழ்மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான காத்திரமான எந்தவொரு முன்மொழிவுகளையும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறானதொரு வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்குத் தான் வாக்களிக்குமாறு நண்பர் சுமந்திரன் கூறுகிறார். அவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழ்மக்களுக்கு என்ன செய்வார் என்பது அவருக்கே தெரியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் எழுச்சிப் பொதுக் கூட்டம் இன்று புதன்கிழமை (18.08.2024) மாலை-04.30 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை வேட்பாளர்கள் புதிதாக எதனையும் கூறிவிடவில்லை. ஒரே விடயத்தை வேறுபட்ட மொழிகளில் கூறுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.