ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோருகிறார் ஜெயசேகரன்!

கடந்த -75 வருடங்களாகத் தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் பலவகையில் போராடி இலங்கை அரசு தமிழ்மக்களுக்கான எந்த தீர்வையும் இதுவரை வழங்கவில்லை.பல ஒப்பந்தங்கள், பல வட்டமேசை மாநாடுகள்,  பல பேச்சுவார்த்தைகள், பல வாக்குறுதிகள் நடைபெற்றும் எதையும் நிறைவேற்றவில்லை. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக் குறைந்த அதிகாரமான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் ஜயா வரை ஏமாற்றப்பட்டார்கள். இவ்வாறான சூழ் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்களின் தீர்வுக்கான புதிய அணுகுமுறையாக அணுகி ஒவ்வொரு தமிழ்மக்களும் சங்குச்  சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,    

நாம் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள். வடக்கு, கிழக்குத் தமிழர்களுடைய தாயகம். நாம் தனித்துவமானவர்கள். எமக்குச் சுயநிர்ணய உரிமையுண்டு எமது நிலம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு போன்றன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குப் பூரண சுயாட்சி அதிகாரம் எமது பகுதிக்குத் தேவை என்பதை முன்னிறுத்தித் தமிழ்மக்கள் தங்கள் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக இந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதி ஒவ்வொரு தமிழனும் தவறாது சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து எமது உரிமையை நிலைநாட்ட வேண்டும். 

எமது கோரிக்கையை வன்முறையற்ற ஜனநாயக வழியில் கிடைத்த அரிய சந்தர்ப்பமான இத் தேர்தலில் எமது மக்கள் ஒவ்வொருவரும் தவறாது அதிகூடியளவில் வாக்களிக்க வேண்டும். 

இதன்மூலம் இலங்கை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் தமிழர்கள் தம் உரிமைக்கான கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு தமிழ்மகனும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் நாங்கள் ஒவ்வொருவரும் இந்த உரிமைக்கான அங்கீகாரத்திற்குப் பங்களித்து உள்ளோம் என்பதை உறுதிப்படுத்த வடக்கு- கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதியில் வசிக்கும்  எமது தாயகத்தைச் சேர்ந்த தமிழ்மக்கள் அனைவரும் தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேத்திரனை ஆதரித்துச் சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து உங்கள் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.