தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாக்குகளே தமிழ் பொது வேட்பாளருக்கான வாக்குகள் - தமிழ் சிவில் சமூக அமையம்

 


ஒற்றையாட்சியைத் தமிழ் மக்களால் தீர்வாக ஆராயவும் முடியாது : 13 ஆம் திருத்தத்தையும் தீர்வொன்றின் அடிப்படையாகக்கூட ஏற்க முடியாது

எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகளைக்  கூட்டாகப் பிரகடனம் செய்ய, தமிழ்ப் பொது வேட்பாளர்        திரு. பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு (சங்குச் சின்னத்திற்கு) வாக்களிக்க தமிழ் சிவில் சமூக அமையம் கோருகின்றது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

21 செப்டம்பர் 2024 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலில் முதற் தடவையாக தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித்  தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்காக சங்குச் சின்னத்தில் திரு பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக  நிறுத்தியுள்ளோம். 

காலங்காலமாகச் சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பை எதிர்கொண்டு போராடி வருகின்ற தமிழ்த் தேசம் தனது உயிரினும் மேலாகக் கருதி வரும் தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான ஒருவாய்ப்பாக வரவிருக்கின்ற தேர்தலைப் பயன்படுத்துவதற்காக தேர்தலில் எம்மால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் பணிவன்புரிமையுடன் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

1982 முதல் இன்றுவரை இலங்கையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்கள் எல்லாம் சிங்கள-பௌத்த பேரினவாதத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதாகவே அமைந்தன. இத் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஆதரவளித்த, தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர்கள் கூட தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டதுமில்லை, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற சனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டதுமில்லை. அதனால் இனிவரும் சனாதிபதித் தேர்தல்களிலும் வழமைபோல் தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதில் எமக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே வரலாறு எமக்குத் தரும் வழிகாட்டலாகும்.

எனவேதான் இம்முறை நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலைத் தமிழ் தேசத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான தமிழ் மக்களின் தெளிவான ஆணை ஒன்றைச் சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வகையிலான தேர்தலாக மாற்றிப் பயன்படுத்தும் நோக்கில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் கூட்டு முயற்சியில் தமிழ் சிவில் சமூக அமையமும் இணைந்து கொண்டது.


சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளரான திரு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒரு தனி நபருக்கான வாக்குகள் எனக் கருதாமல், அவ்வாக்குகள் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாக்குகளே என்ற புரிதலின் அடிப்படையிலேயே பொது வேட்பாளர் எனும் இச்செயற்திட்டத்தில் நாம் இணைந்து கொண்டோம்.  

எமது பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் வேளையில், ஒற்றையாட்சியைத் தமிழ் மக்களால் தீர்வாக ஆராயவும் முடியாது எனக்கூறியது போல, 13ம் திருத்தத்தையும் தீர்வொன்றின் அடிப்படையாகக்கூட ஏற்க முடியாது என வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எப்போதும் போல உறுதியாகக் கோரியிருந்தோம்.

எனினும் பல்வேறு பங்கீடுபாட்டாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் என்ற அடிப்படையில் எமது கருத்துக்கள் அனைத்தும் முழுமையாகவும், நாம் விரும்பிய மொழிப் பிரயோகத்திலும் உள்ளடக்கப்பட முடியாத யதார்த்த சூழ்நிலையையும் நாம் கருத்திற் கொள்கிறோம்.   

இத்தகைய பின்னணியில், தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான எமது விரிவான வாசிப்பையும் நிலைப்பாட்டையும், பின்வரும் விடயங்கள் தொடர்பிற் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். 

1. அரசியற் தீர்வின் பகுதியாக உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது ஒரு புதிய கூட்டு அரசை இத்தீவில் உருவாக்குவதாக அமைய வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகியவற்றினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் தேசங்களின் ஒன்றிணைவாக அமையும் அரசாக அது அமைய வேண்டும். அதாவது புதிய அரசானது ஒரு பன்மைத்தேசிய அரசு (Plurinational) என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.   

2. ஒற்றையாட்சி அரசு முறைமையையும் அதனது ஒரு அங்கமான 13ம் திருத்தத்தையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதோடு, இவை அரசியற்  தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக்  கூட அமைய மாட்டாது என்பதே தமிழர்களின் நிலைப்பாடாகும். ஒற்றையாட்சி அரசுக்குட்பட்ட எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்புப் பங்குபற்றக் கூடாது. 

3. தமிழர்களின் சுயநிர்ணய அலகானது, அவர்களின் தாயகமானது, ஒன்றிணைந்த (தற்போதைய) வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக  இருக்க வேண்டும். . 

4. பாதுகாப்பு, நாணயக் கொள்கை உட்பட ஒரு சில விடயங்கள் மாத்திரமே மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருப்பதோடு எஞ்சிய அதிகாரங்கள் (Residual Powers) மாநிலங்களிற்கு உரியவையாக அமைய வேண்டும். குறிப்பாக கல்வி, அரச காணி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, வரி இறுக்கும் அதிகாரம் ஆகியன நிச்சயமாக மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை விடயங்களை உள்ளடக்கி  தமிழ் மக்கள் பேரவையால் தமிழ் மக்களின் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவைத் தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாடாக முன்வைக்க வேண்டும்.

5. தொடரும் இனவழிப்பின் ஒரு பகுதியாக போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பன்னாட்டு குற்றவியல் விசாரணையை தமிழ் மக்கள் வேண்டுவதோடு, உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட உள்ளக செயன்முறைகள் மூலமாக பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் சாத்தியமற்றவை எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

6. 2009ல் ஆயுதப்போர் முடிவடைந்த பின்பும் வழமைபோன்றும், பல்வேறு புதிய வழிகளிலும் முன்னரிலும் விட மூர்க்கமாகவும் வேகமாகவும் தமிழ் மக்களின் மேலாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைச்  சிறீ லங்கா அரசுகள் தொடர்வதைத் தடுத்து நிறுத்த சர்வதேச தலையீடும், சர்வதேச அனுசரணையுடன் கூடிய பொறிமுறையும் கட்டாயமானதும் அவசரமானதுமான தேவைகளாகும்.

7. தமிழ் தேசம் தமக்குரித்தான சுயநிர்ணய உரிமையின்பாற்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையான பொது வாக்கெடுப்பு (ஒப்பங் கோடல்) ஒன்றின் மூலம் தமது அரசியல் தெரிவை மேற்கொள்ளும் வகையில் ஐ.நா.வினால் மேற்பார்வை செய்யப்படும் ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். 

ஆனால், 13ஆம் திருத்தத்தை நிராகரித்து தேர்தல் விஞ்ஞாபனமானது தெளிவாக நிலைப்பாடு எடுக்கவில்லை என நாம் கருதுகிறோம். ஆயுத மோதல்களுக்குப் பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வைப் 13ம் திருத்தத்திற்குள்   முடக்குவதை நோக்கமாகக் கொண்டு உரையாடல்கள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனுபவ ரீதியாக மாகாண சபை முறையானது எவ்விதத்திலும் எமது நாளாந்த பிரச்சனைகளைக்கூடக் கையாள்வதற்குப் போதுமானதன்று என்பது எமது பட்டறிவு.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிற் பெரும்பாலானவை ஒற்றையாட்சியை மறுப்பதாகத் தமிழ் மக்களுக்குச் சொன்னாலும், பிராந்திய மற்றும் பூகோள அரசியற்  சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக நடைமுறையில் “13 அல்லது 13 பிளஸ்” என்ற வரையறைக்குள்ளேயே, அதாவது ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்டே, தமது நடைமுறை அரசியலைச் செய்து வருகின்றனர். இது தவறானது எனத்  தமிழ் சிவில் சமூக அமையம் கடந்த 15 வருடங்களில் பல முறை சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் இன்று எமது தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,  13ம் திருத்தம் தொடர்பில் வெளிப்படையான நிராகரித்தல் அற்ற ஒரு மௌனத்தொனியே வெளிப்பட்டுள்ளது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றமையானது 13ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட தமிழ் மக்கள் கருத முடியாது என்று கூறுவதாகவே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம்.

தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாடுகளாகவும், விஞ்ஞாபனம் தொடர்பான விரிவான வாசிப்பாகவும்,  பகிர்ந்து கொண்டவற்றில், இத் தேர்தல் விஞ்ஞாபனம், சில விடயங்களை  வெளிப்படையாகவும், சில விடயங்களைப்  பூடகமாகவும் வெளிப்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம்.      

தமிழ் சிவில் சமூக அமையம் இந்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொள்கின்ற அதே வேளை தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற தமிழ்த் தேசிய அரசியல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நாம் வலுவாக நம்புகின்றோம், விரும்புகின்றோம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோருகின்றோம்.



இத்தகைய அணுகுமுறையில் இருந்து - வாசிப்பிலிருந்து எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை நாம் வேண்டுகிறோம். தமிழ் அரசியல் நேர்மைப் பாதையில் தடம் பதிக்க நாம் உளச்சுத்தியுடன் தொடர்ந்து பயணிப்போம். தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு அத்தகைய பாதையில் செல்வதை உறுதி செய்ய எம்மாலான அனைத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.

2009இன் பின்னர் நடைபெற்ற மூன்று சனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள், தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தனர். எமது வாக்கைப் பெற்றவர்கள் தேர்தலில் வென்று பதவிக்கதிரை ஏறினாலும் அல்லது தோற்றாலும் ஒரு போதும் சிங்கள் பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து அவர்கள் வெளியேறவில்லை என்பதே எமது அனுபவமாகும். இந்நிலையில் இம்முறை இனவாதிகளான சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை விட தமிழ் மக்களின் அபிலாசைகளை தனது தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்துள்ள, தமிழ்ப் பொதுக்கட்டமைப்பால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்கி எமது இலட்சிய உறுதியை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களைக் கோருகின்றோம்.

நன்றி.

(ஒப்பம்) அருட்பணி வீ. யோகேஸ்வரன்

இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூக அமையம்


(ஒப்பம்) பொ. ந. சிங்கம்

இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூக அமையம்