மன்னார் மீனவர்கள் ஒன்றிணைக்கும் போராட்டத்துக்கு யாழ்ப்பாண மீனவ சமூகமும் ஆதரவு

 


மன்னார் மாவட்டத்தின் வளங்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நாளை செவ்வாய்க்கிழமை 10.09.2024 மன்னாரில் அமைதிப் பேரணியொன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கு யாழ்ப்பாண மீனவர் சங்கங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பில் வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் உபதலைவரான நா. வர்ணகுலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், 

மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மணல் அகழ்வு, காற்றாலை மின் திட்டங்கள், அந்நிய நாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகள், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை, உள்ளூர் இழுவைமடியில் இருந்து சட்டவிரோதமான தொழில்கள் மற்றும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் எல்லைதாண்டிய வருகை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு  எதிர்ப்புத் தெரிவித்து   மன்னார் கடற்தொழில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு  யாழ்ப்பாண மீனவ சமூகம் தங்களது பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். 

மேலும் இங்குள்ள மீனவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக குறித்த பேரணியில் கலந்து கொண்டு தங்களின் தார்மீக ஆதரவை தெரிவித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். 

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் வடமாகாண கடற்தொழிலாளர்களும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்களும் இணைந்து இப்போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.