யாழ்.பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட 12 இந்தியாவின் தமிழக மீனவர்களையும் அடுத்த மாதம்-08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றப் பதில் நீதிபதி குமாரசுவாமி நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் ஒரு படகுடன் பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான 12 மீனவர்களும் காங்கேசன்துறைக் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.