தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு "எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் தமிழ்த்தேசிய வாதமும்" எனும் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (26.10.2024) காலை யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயரும், மூத்த எழுத்தாளருமான கலாநிதி. எஸ்.ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நூலைச் சம்பிரதாய பூர்வமாக வெளியிட்டு வைக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் காண்டீபன் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
பேராதனைப் பல்கலைக்கழகப் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர்.சங்கரன் விஜேசந்திரன் நூலின் வெளியீட்டுரையையும், கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டப்பீடப் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல்துறையின் தலைவர் பேராசிரியர்.உபுல் அபேரத்ன ஆகியோர் நூலின் மதிப்பீட்டுரைகளையும் நிகழ்த்தினர். நிகழ்வில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர் சா.செ.ச. இளங்கோவன் தொடக்க உரையை ஆற்றினார். யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளியின் வாழ்த்துச் செய்தியை செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் இ.பேரின்பநாயகம் சபையில் வாசித்தளித்தனர்.
இதேவேளை, மேற்படி நூல் பேராதனைப் பல்கலைக்கழகப் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர். சங்கரன் விஜேசந்திரன், பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை விரிவுரையாளர் கலாநிதி. மாலினி பாலமயூரன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது. இந் நூலில் எட்டுத் தமிழ்க் கட்டுரைகளும், ஏழு ஆங்கிலக் கட்டுரைகளும் 323 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. நிகழ்வில் பதிப்பாசிரியர்கள் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டனர்.