கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வம்

இந்திய அமைதிப்படை மேற்கொண்ட ஈழத் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள் வரிசையில் முதல் சம்பவமாகப் பதிவாகிய கொக்குவில் கிழக்கு  பிரம்படி கொடூரப் படுகொலையின்  37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை (12.10.2024) காலை-09.15 மணி முதல் ஆடியபாதம் வீதி, கொக்குவிலிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான நினைவுத் தூபியடியில் கொக்குவில் பிரம்படிப் படுகொலை  நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில்  உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


கொக்குவில் பிரம்படிப் படுகொலை  நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் மு.ஈழத்தமிழ்மணி  தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கொக்குவில் பிரம்படிப் படுகொலைச் சம்பவத்தில் தனது தாய் மற்றும் இரு சகோதரிகளை இழந்த விஸ்வலிங்கம் சுசீந்திரன் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலித்தார். 

அதனைத் தொடர்ந்து நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. மலர் அஞ்சலியைத் தொடர்ந்து நினைவுரைகளும்  நடைபெற்றன. குறித்த நிகழ்வில் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த மாணவரான நயினாதீவைச் சேர்ந்த குணரத்தினம் சற்குணானந்தன் ஞாபகார்த்தமாக குணரத்தினம் விசாலாட்சி குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் தெரிவுசெய்யப்பட்ட கொக்குவிலைச் சேர்ந்த பொருளாதார நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த பத்து மாணவர்களுக்குத் தலா ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. 

மேற்படி நிகழ்வில் கொக்குவில் பிரம்படியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்  யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டர், கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் எஸ்.ஜெயகரன், இளம் சமூகச் செயற்பாட்டாளர்களான க.ராகுலன், ந.விஜயதரன் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.