கந்தர்மடத்தில் நாளை சிவபூஜா மாநாடும் நூல் வெளியீடும்

இந்துசமயப் பேரவை நடாத்தும் சிவபூஜா மாநாடும் இந்துசமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவசக்திகிரீவன் யாத்த சிவபூஜாத் திறவுகோல் எனும் நூல் வெளியீடும் நாளை செவ்வாய்க்கிழமை (15.10.2024) மாலை-04 மணியளவில் கந்தர்மடத்தில் அமைந்துள்ள இந்துசமயப் பேரவையின் நடராஜர் மண்டபத்தில் சிவஸ்ரீ பஞ்சாட்சர்மா சிவானந்தசர்மா தலைமையில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் இந்துசமயக் குருமார்கள், இந்துசமயத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புக்கள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி வாழ்த்துரையையும், இணுவில் திருப்பதி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ.பிரசன்னாக் குருக்கள் நூலின் வெளியீட்டுரையையும் ஆற்றவுள்ளனர். நிகழ்வில் சான்றோர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளனர். 

முன்னதாக நாளை காலை-06 மணியளவில் சிறப்புச் சந்தியும், கடந்த கால யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்குச் சிறப்புத் தர்ப்பணம் நடைபெற்றுப் பின்னர் உயிர் நீத்தவர்களின் மேல் கதி கருதி ஹோமசாந்தியும் நடைபெறும். இதில் உயிர் நீத்தவர்களின் உறவுகள் கலந்து கொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்றுத் தொடர்ந்து வேற்பெருமானுக்குச் சர்வசத்ரு சங்கார ஹோமம் நடைபெறும்.