பார்வையற்றவர்களின் வாழ்க்கைப் பயணம் பல சவால்களுக்கு மத்தியிலேயே நகர்கின்றது!


ஒக்டோபர்-15 சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம். வெள்ளைப் பிரம்பு தொடர்பான விழிப்புணர்வைச் சமூகத்தில் ஏற்படுத்தி பார்வையற்றோர் வாழ்வினை ஆரோக்கியப்படுத்துவதே இத்தினம் அணுடிக்கப்படுவதன் நோக்கமாகும். இன்றும் பார்வையற்றவர்களின் வாழ்க்கை பயணம் பல சவால்களுக்கு மத்தியிலேயே நகர்கின்றது. சகல இடங்களிலும் பார்வையற்றவர்கள் பல இடர்பாடுகளுக்கு மத்தியிலேயே ஊடாடுகின்றனர். இந்த இடர்பாடுகளைத் தவிர்ப்பதற்கு சமூகத்தவர்களின் உதவி இன்றியமையாததாகின்றது. எனவே வெள்ளைப்பிரம்புடன் ஒருவரைக் காணுமிடத்து அவருக்கு வேண்டிய உதவிகளை வழங்கி அவருடைய பயணத்தை ஆரோக்கியப்படுத்துவோம் என மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான கருவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (15.10.2024) அனுஷ்டிக்கப்படும் வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாது,     
 
குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் மத்தியில் வெள்ளைப்பிரம்பின் பயன்பாடு, பாவணை ஆகியவை தொடர்பில் பொருத்தமான விழிப்பூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியப்பாடு காணப்படுகின்றது. இந்த விடயத்தை கருவி நிறுவனத்தைச் சார்ந்த பார்வையற்ற அங்கத்தவர்கள், அனுபவ ரீதியாக வெளிப்படுத்தியுள்ளனர். கருவி நிறுவனம் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

வெள்ளைப்பிரம்பு என்பது பார்வையற்றவர்களின் ஓர் அடையாளச் சின்னமாகும். வெள்ளைப்பிரம்பானது பொதுமக்களை விழிப்பூட்டிப்  பார்வையற்றவர்களின் நடமாடுதலை வளப்படுத்துகின்றது. நாம் ஒவ்வொருவரும் இயலுமானளவு பார்வையற்றவர்களுக்கு உதவி புரிந்து அவர்களின் வாழ்வை ஆரோக்கியப்படுத்துவோம் என்றுள்ளது.