நிரந்தர சமாதானம் நிலவ வேண்டி நல்லூரிலிருந்து கதிர்காமக் கந்தன் ஆலயத்திற்கு யாத்திரை

கார்த்திகை விரதத்தை முன்னிட்டு இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவ வேண்டி இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயம் வரையான புனித திருத்தலத் தரிசன யாத்திரை நேற்று வியாழக்கிழமை (17.10.2024) காலை-08.45 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷங்களுடன் ஆரம்பமானது.

இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஆணையாளர் வை.மோகனதாஸ் தலைமையில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிவகுரு  ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் தேங்காய் உடைத்து, ஆசி உரை நிகழ்த்தித் தரிசன யாத்திரையை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து யாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள் மிருசுவில் வடக்குப்  பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து வேல் பெற்றுத் வேல் தாங்கிய தரிசன யாத்திரையை தொடர்ந்து வருகின்றனர்.        


இந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ள அடியவர்கள் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாகப் பிரசித்திபெற்ற ஆலயங்களில் பூசை, பஜனை வழிபாடுகளுடன் கதிர்காமம் ஏழுமலையான் ஆலயத்தை நாளை சனிக்கிழமை (19.10.2024) சென்றடைந்து கதிர்காமம் ஏழுமலையான் சந்நிதியில் அபிஷேகம், விசேட பஜனை வழிபாடு மற்றும் காவடி உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர் எனத் தரிசன யாத்திரை ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

மேற்படி யாத்திரையில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள், சைவப்புலவர் கந்த சத்தியதாசன் மற்றும் ஆண், பெண்  அடியவர்கள் என 60 பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)