தற்போது சமூகநலன் அருகிவிட்டது!

உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக நலன்களாக மனித வாழ்க்கை கூறுபோடப்பட்டுள்ளது. முன்னைய காலங்களை விடத் தற்போது மனித உள நலன் அதிகம் பேசும் பொருளாகியுள்ளது. அதற்கு உளநலப் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதே காரணமாகும். அதுமாத்திரமன்றித் தற்போது சமூகநலன் அருகிவிட்டது என யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

"வேலையில் உளநலம்" எனும் தொனிப் பொருளிலான உலக உளநல நாள் மற்றும் தேசிய உளவளத்துணை நிகழ்ச்சி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (22.10.2024) பிற்பகல் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வேலைச் சூழலில் உள்ளவர்கள் வேலைச் சூழலையும், குடும்பச் சூழலையும் சமநிலையில் பேண வேண்டும். இதில் சமநிலை பாதிக்கப்படுமாயின் குழப்பம் ஏற்பட்டு முரண்பாடுகள் ஏற்பட்டு உளநலப் பாதிப்புக்கள் ஏற்படும். வேலைச் சூழலும், குடும்பச் சூழலும் ஆரோக்கியமாக அமைய வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.