யாழ்.போதனா வைத்தியசாலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை(21.10.2024) முற்பகல்-11.30 மணி முதல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


மூத்த எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான மு. ஈழத்தமிழ்மணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்ரர் பொதுச் சுடர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள், மேற்பார்வையாளர் மற்றும் நோயாளர்கள் என 68 பேருக்கும், யுத்தத்தில் வீரகாவியமாகிப் போன மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மு.ஈழத்தமிழ்மணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்தினர்.            

மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.