அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை (22.10.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் நுகர்வுப் பொருட்களின் தற்போதைய விலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன் மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாயிகளிடமிருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும் முறையான பொறிமுறையொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.