சிறுவர்கள் சிறுவர்களாக இருக்கின்ற போதே அவர்களுக்கு ஏனைய சிறார்களையும், சக மனிதர்களையும் மதிக்கவும், உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கவும், அன்பு செலுத்தவும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்களாகவும், இரக்கம் காட்டவும் கற்றுக் கொண்டால் சிறந்த மனிதர்களாக உருவாக முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் கவனிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு கடந்த சனிக்கிழமை (05.10.2024) யாழ்ப்பாணம் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறுவர்களுக்கான உரிமைகளில் சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு போன்றன முக்கியமானவை. இதனை வடக்கு மாகாணத்தில் இயங்குகின்ற சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்கின்றன. இந் நிறுவனங்களிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவதுடன் இன்னும் பல மாணவர்கள் இவ்வாறு பல்கலைக்கழகம் செல்வதற்குத் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.