இதுவரை மதுபானசாலைகள் இல்லாத நீர்வேலியில் புதிதாக மதுபானசாலை: எதிராக மக்கள் போராட்டம்


ஜே-268 நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட வில்லுமதவடிப் பகுதியில் முன்னைய அரசின் ஆட்சிக் காலத்தில் புதிதாக மதுபானசாலைக்க்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திறப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனைக் கண்டித்து நீர்வேலிக் கிராம மக்களும், பிரதேசப் பொது அமைப்புக்களும் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (04.10.2024) மாலை-03.15 மணியளவில் கோப்பாய்ப் பிரதேச செயலகம் முன்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சீரழிக்காதே.... சீரழிக்காதே....நீர்வேலிக் கிராமத்தைச்  சீரழிக்காதே!,  அமைதியான கிராமத்தில் மதுபானசாலை வேண்டாம்!, உங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்கு எமது பூர்வீக கிராமத்தை அழிக்காதே!, வியாபாரிக்குச் சில்லறை மக்களுக்குக் கல்லறை, இளைஞர்களின் எதிர்காலம் மதுபானம் இல்லா சமுதாயம் உள்ளிட்ட பல்வேறு பதாதைகளைத் தமது கைகளில் ஏந்தியும், பல கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின் நிறைவில் கோப்பாய்ப் பிரதேச செயலாளர் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,  

நீர்வேலி  ஒரு அமைதியான கிராமம். இக் கிராமத்தில் இதுவரை மதுபானசாலை எதுவும் இல்லாமையால் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழந்து வருகின்றனர். புதிதாக மதுபானசாலை திறப்பதன் மூலம் கிராம மக்களின் மகிழ்ச்சியான வாழ்வு சீர்குலையும் ஆபத்து உள்ளதுடன் சமூக ஒற்றுமையையும், நிம்மதியையும் பாதிக்கக் கூடும்.         

மதுபானசாலை திறக்கப்  பரிந்துரைக்கப்பட்ட இடம் நீர்வேலிக் கந்தசுவாமி கோவிலிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிப் பாலர் பராமரிப்பு நிலையம், ஸ்ரீ சுப்பிரமணிய வாசிகசாலை, மாதர் சங்கம் போன்ற முக்கிய அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. இவ்விடங்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் அடிக்கடி செல்கின்ற இடங்களாக இருப்பதால் மதுபானசாலையின் இருப்பு இவற்றிற்கு ஆபத்தான சூழலை உருவாக்கும். நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி குறித்த மதுபானசாலை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்ட இடத்திலிருந்து 750 மீற்றர் தூரத்தில் உள்ளது. இளைய தலைமுறையினரின் கல்வி மற்றும் நன்னடத்தை வளர்ச்சிக்கான அக்கறையில் முக்கியம் பெறும்  பாடசாலைக்கு அண்மையில் இத்தகைய மதுபானசாலை செயற்படுவது மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கானது.

எனவே, இவை அனைத்தையும் கருத்திற் கொண்டு எமது கிராமத்தில் புதிதாக மதுபானசாலை அமைக்கப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். இதுதொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவும், கோப்பாய்ப்  பிரதேச செயலாளரும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.