இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மாவை சேனாதிராசா அக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனுக்கு இன்று திங்கட்கிழமை(07.10.2024) கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாவை சோமசுந்தரம் சேனாதிராசா ஆகிய நான் இதுவரை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி மாதம்- 21 ஆம் திகதி இடம்பெற்ற போது பொதுக் குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். தாங்கள் அந்த வகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏற்கவில்லை. அதனால், நான் தொடர்ந்தும் கட்சியின் தலைவராக செயலாற்றி வந்துள்ளேன். அந்தப் பொறுப்பை உடன் ஏற்றுத் தலைவராகச் செயற்படுமாறு அன்றிலிருந்து பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளேன்.
2024 ஒக்டோபர்-07 ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளேன் என்பதனை இக்கடிதம் மூலம் அறியத்தருகின்றேன்.எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்று நிறைவேற்றிச் செயற்படுமாறு வற்புறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை, இக் கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியகலாநிதி பா.சத்தியலிங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.