தீபாவளிக்கு மறுநாள் வட- கிழக்கு மாகாணங்களில் பாடசாலை விடுமுறையை அறிவிக்காமை மிகுந்த ஏமாற்றம்!

   


இலங்கைவாழ் சைவமக்களின் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியின் மறுநாளும்,  சைவமக்களின் தலையாய விரதங்களில் ஒன்றான கேதாரகௌரி விரத இறுதி நாளுமான வெள்ளிக்கிழமையை (01.11.2024) மலையக மாகாணங்கள் பாடசாலை விடுமுறையாக அறிவித்துள்ள நிலையில் சைவர்கள் மிகவும் செறிந்து வாழும் வட- கிழக்கு மாகாணங்களில் அறிவிக்காமை மிகுந்த ஏமாற்றத்தைத் தோற்றுவித்துள்ளது என அகில இலங்கை சைவமகாசபை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அகில இலங்கை சைவமகாசபை இன்று வியாழக்கிழமை (31.10.2024) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

இன்று வடக்கு, கிழக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்தல் கிடைக்குமென எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்துள்ளதாகப் பாடசாலைச் சமூகத்தினர் எமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். வட- கிழக்கைப் பொறுத்தவரை அநேக சைவப் பெண்கள் இந்தக் கௌரிக்  காப்பு நோன்பை அனுஷ்டித்து வரும் நிலையில் கேதாரகெளரி விரத இறுதிநாளில் விடுமுறை அறிவிக்காமை அனைவருக்கும் ஏமாற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.

இந்த விடயத்தில் உடனடிக் கரிசனை எடுத்து விடுமுறை அறிவிக்க மாகாண ஆளுநர்கள், அவர்களுடைய காரியதரிசிகள் கவனமெடுக்குமாறு வேண்டுகின்றோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

.