யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின்  24 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (19.10.2024) யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.   

நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு முன்பாகச் சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, யுத்தகாலத்தின் போது சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளராகத் தளராத துணிவோடுத் தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்து வந்த இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆயுதம் தாங்கிய இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவொன்றினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.