தமிழ்மக்கள் சுயாட்சி பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டி இந்துசமயப் பேரவையில் சிறப்புக் ஹோம வழிபாடு

தமிழ்மக்கள் சுயாட்சி பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டி யாழ்ப்பாணம் கந்தர்மடம் இந்துசமயப் பேரவை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் நடராஜப் பெருமானுக்குச் சிறப்புக் ஹோம வழிபாடு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15.10.2024) அதிகாலை-05.30 மணியளவில் ஆரம்பமாகி முற்பகல்-11.15 மணி வரை மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

விசேட சந்தியுடன் ஆரம்பமாகிக் கடந்தகால யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்குச் சிறப்புத் தர்ப்பணம் இடம்பெற்றதுடன் பின்னர் உயிர் நீத்தவர்களின் மேல் கதி கருதி ஹோமசாந்தியும் நடைபெற்றது.

தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம்  மற்றும் வேற்பெருமானுக்குச் சர்வசத்ரு சங்கார ஹோமம் என்பன பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ. ச.சோமஸ்கந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால்  சிறப்புற நிகழ்த்தப்பட்டன. அதனைத்  தொடர்ந்து  விசேட அபிஷேக பூசை வழிபாடுகளும் நடந்தேறின. 

நேற்றுப் புதன்கிழமை (16.10.2024) பிற்பகல் இரண்டாவது நாளாக ஸ்ரீமத் நடராஜ மூர்த்திக்கு விசேட ஹோமமும், திரவிய சகித ஸ்நபன அபிஷேகமும் இடம்பெற்றது. 

இதேவேளை, மேற்படி வழிபாடுகள் தொடர்பாக மூத்த எழுத்தாளரும், சிவாச்சாரியாருமான கோப்பாய் சிவம் தெரிவித்த கருத்துக்கள் இத்துடன் காணொளி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.