தமிழர் பிரச்சினைக்கு இணைந்த வட- கிழக்கில் சமஷ்டித் தீர்வு: தமிழர் சம உரிமை இயக்கம் வலியுறுத்து!

தமிழர் பிரச்சினைக்கு இணைந்த வட- கிழக்கில் சமஷ்டித் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழ்மக்கள் பேரவையின் வரைபை ஒட்டிய ரீதியில் அந்தத் தீர்வு இருத்தல் வேண்டுமெனவும், இறுதி யுத்தத்தில் அழிக்கப்பட்ட தமிழ்மக்களுக்குப் பரிகார நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழர் சம உரிமை இயக்கத்தின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழர் சம உரிமை இயக்கத்தின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு  அண்மையில் மாவை கலட்டிப் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்மக்களுக்கான பொதுக் கொள்கைப் பிரகடனங்களாகப் பன்னிரு அம்சத் திட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.         

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி விசாரணையும் ஆற்றுப்படுத்துகைகளும் தீர்வுகளும், அரசியல் கைதிகளினது முழுமையான நிபந்தனையற்ற விடுதலை, விடுவிக்கப்படாத வடக்கு- கிழக்கு மாகாணங்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல், வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி, மருத்துவ, சிறப்பு நலனோன்பு முதலீட்டு நடவடிக்கைகளுக்கான முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குதல், வடக்கு- கிழக்கு மாகாணங்களின் தமிழர் மரபுரிமைகளை மாற்றம் செய்வதை முற்றாக நிறுத்துதலும், ஏற்கனவே ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட மரபுரிமை மாற்றம் செய்யப்பட்டவற்றை யுத்தத்திற்கு முன்னரான பழைய நிலைக்குக் கொண்டு வருதலும், அனைத்துத் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துதலும், இனவிகித சமநிலையைப் பேணுதலும், மிகவும் வீழ்ச்சியடைந்துள்ள தமிழர் சனத் தொகையை அதிகரிக்கும் வகையில் பிறப்பு வீதத்தை உயர்த்தும் செயற்பாடுகளுக்கு உந்துசக்தி அளித்தல், வனப் பாதுகாப்பு, தொல்லியல் திணைக்களத்தின் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீளக் கையளித்தலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துதலும், ஊழலை அனைத்துத் தளங்களிலும் ஒழித்தலுக்குப் பாடுபடுதலும், ஊடக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துதலும், மது போதையிலிருந்து இளையோரை மீட்கும் சிறப்புச் செயற்திட்டத்தைத் தமிழர் தாயகத்தில் நடைமுறைப்படுத்தல் ஆகிய திட்டங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

நீண்டகாலமாகப் பாராமுகமாகவிருக்கும் தாய்களும், சேய்களும் சொல்லொணாத் துயரை அனுபவிக்கும் வடமாகாணத்தின் ஒரேயொரு போதனா மருத்துவமனையான  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் புதிய மகப்பேற்று விடுதித் தொகுதிக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கிடப் பாரிய அழுத்தத்தை மக்கள் இயக்கமாகக் கொடுத்தலும், நிபுணத்துவ வழிகாட்டல்களையும், அதற்கான சாத்தியப்பாடான நிதி மூலங்களை ஒழுங்கமைத்தலும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மாவட்டப் பொதுமருத்துவமனையாகத் தரம் உயர்த்துதல், சங்கானை ஆதார மருத்துவமனையை உருவாக்குதல், சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார மருத்துவமனைகளை உரிய தர நியமங்களுக்கு அமைவாக இயங்க வைத்தல், முல்லைத்தீவு மாவட்டப் பொது மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனையை உரிய  தரங்களுக்கு அமையத் தொழிற்பட வழிவகுத்தல், சுழிபுரம், மூளாய், பொன்னாலை ஆகிய பாரிய கிராமங்களின் மருத்துவ சேவைக்குரிய தொல்புரம் மருத்துவமனையைப் பிரதேச மருத்துவமனையாகத் தரம் உயர்த்துதல், கடல் கடந்த தீவு மருத்துவமனைகளை ஊர்காவற்துறை ஆதார மருத்துவமனையுடன் இணைத்து நோயாளர் அம்புலன்ஸ் படகுச் சேவையை மிகச் சிறப்பான முறையில் வலிப்படுத்துதல், நாட்டிலேயே தற்கொலைகளில் முதன்மை நிலையிலுள்ள வடபுலத்தை ஆற்றுப்படுத்துகைப் பொறிமுறைகள் ஊடாக குறைக்கப் பாடுபடுதலும், உளநல சேவைகளை வலுவாக்கலும் ஆகிய திட்ட முன்மொழிவுகளும் தமிழர் சம உரிமை இயக்கத்தின் நாடாளுமன்றத் தேர்தல்  விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவமும் சுகாதார சேவைகளும், கல்வி, விளையாட்டு, இயற்கை வளப் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகளின் நலனோன்பு, விவசாயமும் விலங்கு வேளாண்மையும், கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி, கைத்தொழில் மேம்பாடு, சிறுவர், பெண்கள் நலனோன்பு, போக்குவரத்து ஆகிய திட்ட முன்மொழிவுகளில் வேறு பல முக்கியமான விடயங்களும் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.