தமிழ்மக்கள் தமிழ்த்தேசியத்தை விட்டு விலகவில்லை: கஜேந்திரகுமார் காட்டம்


 இம் முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தேசிய சக்திக்கு கிடைத்த மூன்று ஆசனங்களுக்கான வாக்குகளையும் எடுத்து நோக்கினால் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அங்கஜன் இராமநாதனுக்கும் கிடைத்த வாக்குகளையும் விடக் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. தமிழ்மக்கள் தமிழ்த்தேசியத்தை விட்டு விலகியதாகவோ, தமிழ்த்தேசியத்தை நிராகரிக்கின்ற தேசிய மக்கள் சக்திக்குப் பெருமளவு வாக்குகளை அளித்துள்ளதாகவோ கூறப்படும் கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  

யாழ்.கொக்குவிலிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுச் சனிக்கிழமை (16.11.2024) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடந்த ஐந்து வருடங்களாக எங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் நாங்கள் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து செயற்படாததும்,  மற்றது நாங்கள் ஆக இறுக்கம் என்பதும் ஆகும். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எங்கள் அணுகுமுறை சார்ந்ததாக இருந்ததேயன்றி கொள்கை சார்ந்ததாக அல்ல.  தமிழ்மக்கள்  பாதிக்கப்படுகின்ற போதும், வீதிகளில் இறங்கிப் போராடுகின்ற போதும் எமது உறுப்பினர்கள் மக்களுடன் மக்களாகச் செயற்பட்டு வருகிறார்கள். அதுமாத்திரமல்லாமல் மக்கள் நேரடியாகச் செயற்பட முடியாத இடங்களில் கூட நாங்கள் தலையிட்டும் பாதிப்புக்களை  எதிர்கொண்டுள்ளோம். மக்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கான  மனிதாபிமான, நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் கல்விசார்ந்த மாணவர்களுக்கான உதவிகள் வழங்குதல் என்பன வேறு எந்தக் கட்சிகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத பணிகளாகக் காணப்படுகின்றன. 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது நேரடியான விமர்சனங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்ற போதிலும் எங்கள் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பிலான ஆழமான ஆய்வுகளை நாங்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக மேற்கொள்வதுடன் எங்கள் தரப்பிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கத் தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.     

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து இந்தத் தடவை எமக்கு வாக்களித்தமையைத் தவிர்த்து வேறு தரப்பினருக்கு வாக்களித்தவர்கள் அவர்கள் விரும்பினால் நேரடியாக எங்களுடன் தொடர்பு கொண்டு தமது.விமர்சனங்கள், கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார். 

இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.