"ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் " என்பதைச் சொல்லாமல் செய்து காட்டிய மனைவி மயூரிக்கா எனக்கு மனைவியாக அமைந்ததற்கு ஆயிரம் தவம் இருந்தாலும் கிடைக்காத அற்புதமான உறவு. ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் அவள் என இம்முறை தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நம்பிக்கையில் போட்டியிட முன்வந்தேன் என்பது உண்மை. நான் வெற்றி பெற வேண்டும் எனப் பலரும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல நல்லுள்ளங்கள் இணைந்தனர். அதில் 30 பேரைக் கொண்ட எனது பிரச்சார அணி தம்மை இழந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணமோ, குடிக்க தண்ணியோ, லஞ்சமோ இல்லாமல் பணியாற்றியது. அவர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான நல்ல மனிதர்கள் எம்மோடு இணைந்து கொண்டனர்.
அதையும் தாண்டி அனைத்தையும் சரியாக வழிநடாத்தி அனைவரையும் வெற்றி கொண்டு என்னைச் சரியாக, நேர்மையாக, சவால்களைச் சமாளித்து மனதுக்குள் அழுது கொண்டு, அனைத்து அவமானங்களையும் சகித்துக் கொண்டு எனக்கு வெளிக்காட்டாமல், என்னைக் கலங்க விடாமல் என்னைச் செதுக்கி உருவாக்கினார் இரும்புப் பெண்மணி எனது மனைவி மயூரிக்கா எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.