வல்வெட்டித்துறையில் தேசியத்தலைவரின் அகவைத் திருநாள் வெகுவிமர்சை

ஈழத்தமிழர் விடுதலைக்காக இறுதிவரை உறுதியுடன் போராடி  உலகத் தமிழ்மக்களின் மனங்களில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்த தமிழீழத் தேசியத் தலைவரின் 70 ஆவது அகவைத் திருநாள் நிகழ்வு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லம் அமைந்திருந்த காணியில் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2024) வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  

அடைமழைக்கு மத்தியிலும் மூத்த தமிழ்த்தேசிய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அப் பிரதேச மக்கள் ஒன்றுதிரண்டு தலைவருக்குக் கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மரக் கன்றுகள் வழங்கியும் பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தலைவரின் புகைப்படத்தினைக் கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவ்விடத்திற்கு வந்திருந்த வல்வெட்டித்துறைக் காவல்துறையினர் தலைவருடைய புகைப்படத்தினைப் பயன்படுத்துவதற்குச் சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தனர். இந் நிலையில் அந்தக் கோரிக்கையினை ஏற்ற மக்கள் தலைவரின் படத்தினை அகற்றிவிட்டுச் சிறப்பான முறையில் பிறந்ததினக் கொண்டாட்டத்தை நடாத்தினர். 

வல்வெட்டித்துறைக்கே உரித்தான பாரம்பரிய உணவான எள்ளுப்பாகு மற்றும் கேக், சொக்லேட் வகைகள் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்குப் பரிமாறப்பட்டன.  

70 ஆவது பிறந்த தினத்தை நினைவூட்டும் வகையில் அவருடைய வீட்டு வளாகத்திற்குள் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களால் 70 மரங்கள் நடுகை செய்யப்பட்டதுடன் 70 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் 70 தென்னைமரக் கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன. 

தொடர்ச்சியான அடைமழைக்கு மத்தியிலும் இன்று மாலைவரை தமிழர் தாயகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகைதந்த தமிழ்த்தேசியப் பற்றாளர்கள், மக்கள் தாங்கள் கொண்டு வந்த கேக்கை வெட்டியும், இனிப்புக்களைப் பரிமாறியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.