சிங்கள இனவாதம், சிறீலங்கர் என்ற பொதுத் தேசியவாதம், போலிச் சம உரிமைவாதம், அர்த்தமற்ற பொருளாதார அபிவிருத்தி வாதம் என்பவற்றைத் தவிர்த்துத் தமிழ்த்தேசியத்துக்கு மட்டுமே வாக்களியுங்கள் எனத் தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ்மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும்-14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டுத் தமிழ்சிவில் சமூக அமையம் நீண்ட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான சில விடயங்கள் வருமாறு,
தமிழ்த்தேசிய அரசியல் நீக்கம், தமிழ் வாக்குகளைச் சிதறடிப்பது போன்ற நோக்கங்களிற்கு மேலதிகமாகத் தேசிய மக்கள் சக்தி தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள சிறிய குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ்மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து ஒரு சில ஆசனங்களையாவது பெற்றுத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையையும் உறுதிப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேசிய மக்கள் சக்தி இதுவரை தமிழ்த்தேசியத்திற்காகவோ, மக்களுக்காகவோ சிறுதுரும்பைத் தானும் நகர்த்தியிராத எமது சமூகத்தில் சிறிய அளவில் மட்டும் அறியப்பட்ட சலன புத்தியுள்ளவர்கள் சிலரை ஊழலற்றவர்கள் என்ற போலி அடையாளமிட்டுத் தமது வேட்பாளர்களாகத் தமிழர் தாயகமெங்கும் களமிறக்கியுள்ளது.
இவர்களுள் யாராவது துர்லாபமாக வெற்றிபெற்றாற்கூட அவர்களால் தமிழர்கள் மேலான இன அழிப்புத் துன்பங்களுக்குத் தீர்வெதையும் பெற்றுத் தர முடியாது.திட்டமிட்டு இன அழிப்பு நோக்கங்களுக்காகத் தடுக்கப்பட்டுள் பாரிய அபிவிருத்திகளையும் இம் மண்ணிற்குக் கொண்டுவர முடியாது. மாறாக எப்போதும் இணக்க அரசியல் பேசுபவர்கள் செய்வதைப் போல தமது தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் அரசு இவர்களது ஆள்கள் சிலருக்கு சில தனிப்பட்ட சலுகைகளை இவர்களூடாக வழங்கி இவர்களுக்கான ஒரு வாக்கு வங்கியை உருவாக்க உதவி செய்வது மூலம் தமிழ்த்தேசியத்துக்கான வாக்கு வங்கியைச் சிதறடிக்கும்.
இவர்களுக்கு வழங்கப்படும் வாக்கு அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் நன்றிக்கடனாகத் தமது எஜமானர்களின் தமிழ் இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்வதற்கு உதவுபவர்களாகவும், அவர்களது பாவங்களுக்கு வெள்ளையடிப்பவர்களாகவும் இவர்கள் செயற்படுவர். தே.ம.சக்தி வேட்பாளர்களிற் சிலர் தமது எஜமானர்களால் தமக்கு வழங்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் நீக்கப் பணிகளை ஏற்கனவே செய்யவும் தொடங்கி விட்டனர்.
இற்றைவரை ஜேவிபியோ அல்லது அதன் இன்னொரு வடிவமான தேசிய மக்கள் சக்தியோ தமது பேரினவாத நிலைப்பாடுகளைக் கைவிட்டதாகவோ, அவை இறந்தகாலமெனவோ அறிவிக்கவில்லை. தமது பேரினவாத நிலைப்பாடு தவறென்று ஒப்புக் கொள்ளவோ அதற்காகத் தமிழ்மக்களிடம் மன்னிப்புக் கேட்கவோ இல்லை. காலங்காலமாகச் சிறீலங்கா அரசுகள் தொடர்ந்து புரிந்து வருகின்ற தமிழ் இன அழிப்பை நிறுத்துவோம் எனவோ அவற்றாலேற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வைத் தருவோம் எனவோ கூறவில்லை. ஆகக் குறைந்தது இங்கு ஒரு இனப்பிரச்சினையுள்ளது,அதற்கு ஒரு அரசியற் தீர்வு தேவை என்றுகூட வெளிப்படையாகக் கூறவில்லை.
ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிய தற்போதைய ஜனாதிபதி,பதவிக்கு வந்ததும் அதைத் தொடரவுள்ளதாக அறிவித்ததும், அவரின் மூத்த கட்சித் தோழர்கள் தமிழ்மக்களுக்கு அரசியற் தீர்வு தேவையில்லை எனக் கூறியதும் வரப்போகும் ஆபத்தை முன்னறிவிக்கின்றது.
ஆகத் தேசியமக்கள் சக்தியும், முன்னர் ஆட்சியிலிருந்த சிங்கள ஆட்சியாளர்களும் நுனி நாக்கால் கூறும் “அனைவரும் சமம், அனைத்து இனங்களுக்கும் சம உரிமை, அனைவரும் சிறீலங்கர்கள் என்ற அடையாளத்தை உருவாக்குவோம், அனைவருக்கும் அபிவிருத்தி கிடைக்கச் செய்வோம்” போன்ற வழமையான கோசங்களைத் தவிரப் புதிதாக எதையும் தமிழ்மக்களை நோக்கி இன்றுவரை தேசியமக்கள் சக்தி கூறவில்லை. ஆகவே, தமிழ்மக்கள் யாருக்கு வாக்களிப்பது?
தமிழ்மக்கள் இம்முறை முன்னரெப்போதையும் விடக் கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளது. தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுள் தமிழ்த்தேசிய அபிலாசைகளைக் கட்சிக் கொள்கைகளாகக் கொண்ட,மறைமுகமாகவேனும் தமிழ்த் சியத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிராத, சிங்கள அரசின் கைக்கூலிகளாக இயங்கிக் கொண்டிராத, மக்களுக்கு கூறுவது போல தமிழ்த்தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள கட்சிகள் சிலவே உள்ளன.
சில கட்சிகளும், அவற்றின் வேட்பாளர்களும் தேர்தல் வந்தால் மட்டுமே தமிழ்த்தேசியத்தைப் பற்றிப் பேசுவர். தேர்தல் மேடைகளில் மட்டும் சமஷ்டியே தீர்வு, தமிழ்மக்களுக்கெதிராக இன அழிப்பு நடைபெறுகிறது, சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறுவர். பின்னர் கதிரைகள் கிடைத்ததும் வேடங்களைக் கலைத்து ஒற்றையாட்சிக்குட்பட்டும், 13 ஆவது திருத்தத்துக்குள்ளும் தீர்வைத் தேடுபவர்களாகவும், இன அழிப்பு நடைபெறவில்லை என்றும், சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்றும் ஒற்றையாட்சிக்கான ஒத்த கருத்துச் சொல்லுக்குப் புது வியாக்கியானமளித்தும் அரச ஒத்தோடிகளாக மாறுவர். இத்தகைய வேட்பாளர்களும், அவர்களின் கட்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.
ஆகவே, தமிழ்மக்கள் வாக்களிப்பதற்கான தெரிவை அனுபவ அறிவினூடாகச் செய்யும் போது போட்டியிலுள்ள மிகச் சில கட்சிகளும், அவற்றின் வேட்பாளர்களும் மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலுக்கும் அபிலாசைகளுக்கும் எப்போதும் விசுவாசமாகச் செயற்படுபவர்களாக இருப்பர்.
தமிழ்த்தேசிய அரசியற் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது தடுமாற்றமேதுமின்றி தொடர்ந்து உயரிய உறுதியுடன் நிற்கும் கட்சிகளுக்கு எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும் எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எமது மக்களைப் பணிவன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.