இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு முல்லைத்தீவைச் சேர்ந்த துரைராசா ரவிகரன் முதல் தடவையாக நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.
இவர் வன்னித் தேர்தல் தொகுதியில் இரண்டாவது கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். அந்த வகையில் இவர் 11, 215 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இவர் 2013 மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டுத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 8868 விருப்பு வாக்குகள் பெற்று வடக்கு மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இவர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டம், குருந்தூர்மலையில் சிங்கள- பெளத்த ஆதிக்கம், தமிழ்மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்டு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.