யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு!

                       

யாழ்.மாவட்டத்திலிருந்து சுயேட்சையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகச் சிவில் செயற்பாட்டாளர்கள் சிலரால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (21.11.2024) கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றிருந்த வைத்தியர்  இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சித்  தலைவரின் ஆசனத்தில் அமர்த்திருந்தார். இதன்போது நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வேறு ஆசனமொன்றில் அமருமாறு கோரிய நிலையில் அதற்கு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மறுப்புத்  தெரிவித்திருந்ததுடன் இதுதொடர்பான காணொளியைத் தமது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தார்.

நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருந்த மற்றுமொரு காணொளியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைத் தமது இறைவனாகக் கருதுவதாகத் தெரிவித்திருந்தார்.இந் நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அவர் அரசியலமைப்புக்கு முரணான கருத்துக்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.