கேசவன் சயந்தனுக்கு வெள்ளை அடிக்க முயல்வது ஏன்?: சிவசேனையின் முக்கியஸ்தர் கேள்வி!

கேசவன் சயந்தனை மாணவப் பருவத்திலிருந்து நன்கு அறிந்தவன் என்ற வகையிலும், அவரது தந்தையாருடன் ஒன்றாக அரச பணி புரிந்தவன் என்ற வகையிலும் 11.11.2024 ஆம் திகதி யாழிலிருந்து வெளியான மூன்று பத்திரிகைகளில் கேசவன் சயந்தன் தொடர்பில் கம்பவாரி ஜெயராஜ், பேராசிரியர் சி. பத்மநாதன், திருமதி அம்பிகை கைலாசபிள்ளை ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் எனத் தெரிவித்துள்ள சிவசேனை அமைப்பின் முக்கியஸ்தர் என்.பி.ஸ்ரீந்திரன் கேசவன் சயந்தனுக்கு வெள்ளை அடிக்க முயல்வது எதற்காக? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.         

இதுதொடர்பில் அவர் நேற்றுத் திங்கட்கிழமை (11.11.2024) இரவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,     

நண்பன் சயந்தன் மீது எனக்குத் தனிப்பட்ட ரீதியில் எந்தக் கோபதாபங்களும் இதுவரை இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. எனினும்,  இன்றைய தேர்தல் அரசியல் களத்தில் ஒரு வேட்பாளர் தொடர்பில் அவரது அரசியல் தில்லுமுல்லுகளை மறைத்துத் தொழில் ரீதியான ஒரு சில உண்மைகளை, கடமைகளைத் தூக்கிப்பிடித்து அவருக்கு வெள்ளை அடிக்க முனைவது ஏன்? என்பதனையே இந்த மெத்தப்படித்த மேதாவிகளிடம் கேட்க விரும்புகிறேன். இந்த வெள்ளை அடிப்பு வாக்காளப் பெருமக்களிடம் குறித்த நபர் தொடரில் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களைத் தவறான திசைக்கு இட்டுச் செல்லவா? எனக் கேட்க விரும்புகிறேன். இந்த மெத்தப் படித்த மேதாவிகள் அவருக்கு வெள்ளை அடிக்க விரும்பியிருப்பின் தேர்தல் காலத்திற்கு முன்னர் செய்திருக்கலாம் அல்லது பின்னால் செய்திருக்கலாம்.ஆனால் தேர்தல் காலத்தில் செய்வது ஏன்?செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா? அல்லது நக்குண்டார் நாவிழந்தார் என்ற நிலையா? சைவத்தமிழ் மக்களின் வாக்கைத் திருடும் நோக்கமா?

ஐயா கம்பவாரிதி அவர்களே! உங்கள் நண்பன் சயந்தன் சமூகத்தின் இன்ப துன்ப நிகழ்வுகளில் பங்கேற்பதாகவும் ,கம்பன் விழாவிற்கு நிதிப் பங்களிப்புச் செய்ததாகவும் இனப் பற்றுமிக்கவர் எனவும் புகழ்ந்து தள்ளினீர்களே! இன்று தேர்தல் களத்தில் நிற்பவர்கள் வேறு எவரிடமும் இந்தப் பண்புகள் இல்லையா?அவர்களையும் நீங்கள் புகழ்ந்து பாராட்டி நற்சான்றிதழ் கொடுப்பீர்களா? நீங்கள் அவ்வாறு செய்தால் நியாயவாதி நீதிமான். 

நீங்கள் சைவத்தமிழ் மக்கள் அனைவரதும் பொதுச் சொத்து என்ற வகையில் தனி ஒருவரின் தேர்தல் வெற்றிக்காக இவ்வாறு கருத்துரைக்கலாமா? இது சான்றோர்க்கழகா? சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அழகல்லவா?  

அடுத்துப் பேராசியர் சி.பத்மநாதன் ஐயா சயந்தன் தொடர்பில் வழங்கிய நற்சான்றிதழில் முக்கியமானவை தமிழ்த்தேசிய அரசியலுக்கு நேர்மை,  சமுதாயப் பற்று, சேவைபுரியும் ஆர்வம் ஆகிய மூன்று பண்புகள் சயந்தனிடம் தாராளமாகக் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு நீ உன் நண்பர்களைச் சொல் நான் உன்னைச் சொல்கிறேன் என்பதாகும். தமிழ்த்தேசிய அரசியலில் இனி இல்லை என்ற அளவிற்கு நேர்மையீனமாக, வஞ்சகமாக, கபடத்தனம் மிக்கவராக, சர்வாதிகாரியாகவிருந்து தமிழரசு கட்சியை அழித்தொழித்த திரு. சுமந்திரனின் நண்பனாக இருந்து வரும் சயந்தன் தமிழ்த்தேசியத்திற்கான இந்த மூன்று முக்கிய பண்புகளுக்கும் பொருத்தமானவரா? சயந்தனின் அரசியல் நேர்மையீனங்களை அறிய வேண்டுமெனில் பேராசிரியர் அவர்களே! தென்மராட்சி மக்களை ஒரு தரம் சந்தித்துப் பாருங்கள். அது மட்டுமின்றி முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு செய்த அரசியல் துரோகத்தனங்களைச் சீர்தூக்கிப் பாருங்கள். 

திருக்கேதீச்சரத் திருப்பணிப் பிரதித் தலைவர் திருமதி.அபிராமி கைலாய பிள்ளை அவர்கள் தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் போலியானது. முகத்துதிமிக்கது, திருக்கேதீச்சர வளைவுடைப்பு வழக்கை சுமந்திரனும், சயந்தனும் இணைந்து மிக நீண்ட காலமாக நடத்திவருவது இந்துசமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒரு செயல் எனப் புகழ்ந்திருந்தார். அம்மையார் அவர்களே! நீங்கள் சைவப்பெண் தானா? அல்லது பிற மதக் கைக்கூலியா? எனக் கேட்கத் தோன்றுகிறது. ஏனெனில், குறித்த வழக்கு மிகநீண்ட காலமாக இழுபறிப்படுவதற்குத் தம்பி சுமந்திரனும்,  சயந்தனும் தான் பிரதான காரணம் என்பதை அறிவீர்களா?  குற்றவாளிகளான அந்நியமதக் குருவினையும் , அவர் சார்ந்தவர்களையும் காப்பாற்ற முயல்வதை அறிவீர்களா?அல்லது அறியாதவர்கள் போல் நடிக்கிறீர்களா? 

அந்நிய மதத்தவர்களால் திருக்கேதீச்சரர் வளைவு உடைக்கப்பட்ட மதவிரோதச் செயலை மூடிமறைத்து வழக்குப் பேசுவதா இந்து மத நல்லிணக்கம்? மத நல்லிணக்கம் யாருக்கு வேண்டும்? அந்நிய மதத்தவர்களுக்கு வேண்டுமா? இந்துக்களுக்கு வேண்டுமா? போலிக் கருத்துகளைக் கூறிப் புகழ்ந்து சைவமக்களைத் தவறாக வழிப்படுத்தி அவர்கள் வாக்குகளை வீணர்களுக்கு,  மதமாற்றிகளுக்குக் கிடைக்க வழி செய்யாதீர். மத மாற்றிகளுக்கும், அரசியல் வியாபாரிகளுக்கும் வெள்ளை அடித்து சைவவாக்குகளை அபகரிக்க இடம்கொடுப்பதன் மூலம் சிவன் தண்டனைக்கு உட்படாதீர் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.