கிளிநொச்சியில் ஆறு மாதங்களுக்கு இடையில் 23 சாராயக் கடைகள் வந்துள்ளன. கிளிநொச்சியின் ஜமீனுக்கு ஆறு சாராயக் கடைகளுடன் தொடர்புண்டு. யாழ்ப்பாணத்தில் ஆறு மாதங்களுக்கிடையில் 44 சாராயக் கடைகள் வந்துள்ளன. இதில் விக்னேஸ்வரன் அணியினர் இரண்டு சாராயக் கடைகளுக்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதுவா தமிழ்த்தேசியம்? எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்ட மாபெரும் பொதுக் கூட்டம் சனிக்கிழமை (09.11.2024) இரவு யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் பிரதிநிதிகளான எம்பிமார் சாராயக் கடைகளுக்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தால் எங்கள் இனம் எவ்வாறு உருப்படப் போகிறது? என்பது தொடர்பில் எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.
2009 மேமாதம்-18 ஆம் திகதி வரை இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் போராடினார்கள். எமது மக்களைப் பாதுகாத்தார்கள். அதற்குப் பின்னர் வடக்கு- கிழக்கில் தமிழ்மக்களுக்கு எங்கெல்லாம் பிரச்சினைகள் எழுகிறதோ அங்கெல்லாம் எங்கள் கட்சி மாத்திரம் தான் தீவிரமாகப் போராடுகிறது. நாங்கள் ஐந்து பேரோ, ஐம்பது பேரோ உறுதியாக நின்று போராடுவதால் தான் எங்கள் மக்களின் காணிகள் பல இடங்களில் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்தார்.