தமிழ்மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும்!

எதிர்வரும் நவம்பர் மாதம்- 14 ஆம் திகதி சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. சிறிலங்கா தேசம் தமது ஆட்சி அதிகாரத்தைத்  தீர்மானிக்கும் தேர்தலாக இது இருந்த போதும் இத் தேர்தலானது தமிழர் தேசத்தின் மீதும் திணிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் நாடாளுமன்றம் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் தராத போதும் எமது பிரதிநிதித்துவத்தையாவது உறுதிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய நிலையிலே உள்ளோம். அதேபோலவே, தமிழ்மக்கள் எமது அரசியல் நிலைப்பாட்டையும் உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது எனப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,    

இன்று சிறிலங்காவின் பேரினவாதக் கட்சிகள் தாமே தமிழ்மக்களின் மீட்பர்கள் போலவும், தமிழ்மக்களுக்கு அரசியல் பிரச்சினை எதுவுமே இல்லை என்பது போல ஒரு மாயத் தோற்றத்தினை எம் மக்களிடையே, குறிப்பாக இளைய சமுதாயத்தைக் குறிவைத்தே விதைக்கின்றனர். குறிப்பாகத் தேசிய மக்கள் சக்தி என்னும் முகமூடியுடன் வலம் வரும் ஜேவிபி எனும் சிங்கள இனவாதக் கட்சி தமிழ்மக்களின் விடுதலை அவாவினை இலங்கைத் தேசியத்தில் கரைத்து சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதில் மும்முரமாக உள்ளது. தமிழர் தாயகத்தை நீதிமன்றத்தினூடாக இருகூறாகப் பிரிப்பதில் ஆணிவேராகச் செயற்பட்ட இவர்கள் தமிழர் தேசத்திற்கும், சிறிலங்கா தேசத்திற்கும் இடையில் சர்வதேச அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையை முறிவடையச் செய்வதில் காத்திரமான பங்கு வகித்தவர்கள். குறிப்பாகச் சுனாமிப் பேரழிவின் பின் உருவாக்கப்பட்ட சுனாமிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்வதில் பெரும் பங்கு வகித்தவர்கள். தென்னிலங்கையில் சிங்கள இனவாதத்தை தூண்டி தமிழர்மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு ஊக்கிகளாக இயங்கியவர்கள். முள்ளிவாய்க்காலின் இரத்தக்கறை இவர்கள் கையிலும் உள்ளது.  எமது இனத்தின் மீதான இனவழிப்பை இலகுவாக மறந்து, மறைத்து தமிழருக்கு இனப்பிரச்சனையே இல்லை என்று எமக்கே பாடம் எடுக்கின்றனர். இவர்களும் சிங்களப் பேரினவாதிகளின் இன்னொரு வடிவமே. இடதுசாரிகளாகத் தம்மை வெளிப்படுத்தும் இவர்கள் ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள என்றுமே தயாராக இல்லை. இவர்களை எமது தாயகத்திலிருந்து முழுமையாக அகற்ற வேண்டிய தலையாய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.

எமது மண்ணிலேயே பிறந்து வளர்ந்தும், அற்ப சலுகைகளுக்காக எமதினத்தின் இருப்பையே சிங்களப் பேரினவாதத்திடம் தாரை வார்க்கும் துரோகிகளும் எமது மண்ணில் எம்மிடையே உள்ளார்கள். உரிமைகளை விலைபேசி சலுகைகளைப் பெற்றவர்கள் இன்று அந்தச் சலுகைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே உள்ளார்கள். இவர்கள் மீண்டு எழுந்து வரமுடியாத மாபெரும் தோல்வியை வழங்கும் நேரம் இப்போது கனிந்துள்ளது. 

அதேபோல் தமிழ்த்தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் இருப்பையும், ஒற்றுமையையும் சிதைப்பதில் மும்முரமாய் உள்ள சிலரும் வாக்கு வேண்டி உங்களிடம் வருவார்கள். இந்தக் கயவர்களுக்கு மீளமுடியாத தோல்வியைக் கொடுக்க வேண்டிய பாரிய கடமையும் உங்கள் அனைவருக்கும் உண்டு.

சிறிலங்காவின் எந்தத் தேர்தல்களோ அல்லது ஆட்சிப் பொறிமுறைகளோ தமிழ்மக்களின் தேசிய கேள்விக்கு எந்தப் பதிலையும் தராது என்ற யதார்த்தத்தினை உணர்ந்து கொண்டு தமிழ்த்தேசியத்தின் ஒற்றுமையை, தமிழ்மக்களின் பலத்தினை வெளிப்படுத்தும் விதமாக உங்களின் வாக்குகளைப் பயன்படுத்துங்கள்.

தமிழ்மக்களின் இனப் பிரச்சினைக்கு எமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதனூடாக எட்டப்படும் தீர்வே நிரந்தரமாக அமையும். அதன் ஒரு பொறிமுறையாகத் தமிழ்மக்களிடையே சர்வதேசத்தினால் நடாத்திக் கண்காணிக்கப்படும் ஒரு சர்வசன வாக்கெடுப்பினூடாகவேதான் ஓர் நிரந்தர அரசியல் தீர்வினை அடைய முடியும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம். நிரந்தரமான தமிழர்தேசம் இந்தப் பூமிப்பந்தில் உதிக்கத் தொடர்ந்தும் பாடுபடுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.