வடமாகாணக் கல்விப் புலத்தில் சைவசமய விழாக்கள், விரதங்களுக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.கல்விப் புலத்தில் தொடரும் சைவத்திற்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டிக்கிறோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் முக்கியஸ்தரும் சைவத்தமிழ்த் தேசியத்திற்காக நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் குதித்துள்ள சுயேச்சைக் குழு பன்னிரண்டின் முதன்மை வேட்பாளருமாகிய என்.பி.ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் பிரட்லி வலயக்கல்விப் பணிமனையில் நீண்ட காலமாக இருந்த இந்து தெய்வங்களின் படத்தைத் தூக்கி வீசி இருந்தார். கிளிநொச்சி சென்திரேசா பாடசாலை அதிபர் ஆண்டனி சாந்தா வாணி விழாவைக் கொண்டாட விடாதும், ஏடுதொடக்க விடாதும், பொங்கல் செய்ய விடாதும் ஆசிரியர்கள், மாணவர்களைத் தடுத்திருந்தார்.
இந்து தெய்வங்களைத் தூக்கி எறிந்து மதக் காழ்ப்புணர்ச்சியை விதைத்த வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் பிரெட்லி வாணி விழா காலத்தில் அதிபர், ஆசிரியர்களுக்கு வருடாந்தக் கணக்காய்வு அறிக்கைக் கூட்டத்தை 11.10 2024 இல் அறிவித்து வாணி விழாவைக் குழப்பியிருந்தார். இந்த வரிசையில் தீபாவளித் திருநாளின் மறுநாளாகிய கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மலையகப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதும் இந்துக்கள் செறிந்து வாழும் கந்தபுராணக் கலாசாரம் நிலைத்திருந்த சிவபூமியில் விடுமுறை அறிவிக்கப்படாமை சைவ மரபுகளை அழிக்கும் அந்நியமத அதிகாரிகளின் திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டி உள்ளது.
கேதாரகௌரி விரத இறுதி நாள் இந்துப் பெண்கள் அனுஷ்டிக்கும் முக்கியமான விரத நாள். வடமாகாணக் கல்விப் புலத்தில் இந்துப் பெண் உத்தியோகத்தர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவற்றைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்காமை மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுவும் அந்நியமத அதிகாரிகளின் திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது.
இவ்வாறு சிவ பூமி ஆகிய இந்த மண்ணில் சைவமரபுகளைத் திட்டமிட்டு அழிப்பதிலும், இடையூறு செய்வதிலும், மதக் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும், சமய முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதிலும் வடமாகாணக் கல்விப் புல அந்நிய மத அதிகாரிகள் நன்கு திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றனர்.இவை இலங்கை வாழ் இந்துக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களின் மனதைப் புண்படுத்துகின்ற செயற்பாடுகளாகும். எனவே, இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எதிர்காலத்தில் இத்தகைய அந்நியமத இழி செயல்கள் சைவத்திற்கு எதிராக நிகழா வண்ணம் வடமாகாண உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனச் சைவமக்கள் சார்பாகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.