யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வைரவிழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் கடந்த திங்கட்கிழமை (11.11.2024) காலை-08 மணி முதல் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் அதிபர் குலசிங்கம் திலீபன் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
வைரவிழாவின் சிறப்பு நிகழ்வுகள் வரிசையில் பாடசாலையின் 60 ஆவது ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு வைரச்சிமிழ் சிறப்பு மலர் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. தொழிலதிபர் இ.குவேந்திரநாதன் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலலீசன் வைரவிழா நூல் நயப்புரையை ஆற்றினார். இதழாசிரியர்களில் ஒருவரான ஆசிரியர் திருமதி.நவமணி ராஜகுமார் ஏற்புரையை நிகழ்த்தினார்.
இதேவேளை, மேற்படி பாடசாலையின் வைரவிழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட வைரச்சிமிழ் நூல் 160 பக்கங்களைக் கொண்டதாகப் பாடசாலையின் அழகிய முகப்பை அட்டைப் படமாகக் கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனதியான ஆக்கங்களைத் தாங்கி வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயப் பழைய மாணவர் சங்கமும், குமரன் விளையாட்டுக் கழகமும் (கனடாக் கிளை) வைரச்சிமிழ் நூலுக்கு முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)