எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்மக்களுக்குப் பாரியதொரு பொறுப்புள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குத் தமிழ்மக்கள் பலமானதொரு ஆணையை வழங்க வேண்டும். அவ்வாறு ஆதரவு வழங்கினால் ஆயுதமில்லாமல், நேர்மையாக, தமிழினத்தின் உரிமைகளுக்காக உறுதியுடன் செயற்பட்டு முன்னேற்றம் காண முடியும் என்பதை நீங்கள் முதல் தடவையாக அறிவீர்கள். அந்தச் சந்தர்ப்பத்தைத் தமிழ்மக்களிடம் நாங்கள் உரிமையுடன் கேட்கின்றோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் மாபெரும் நாடாளுமன்றத் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (11.11.2024) மாலை யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலையின் அருகில் அமைந்துள்ள இளங்கதிர் மைதானத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுரகுமார திசாநாயக்கா அரசு ஆட்சிக்கு வந்து ஒரு மாதமாகியுள்ள நிலையில் முன்னைய அரசு செய்த அநியாயங்களைத் தான் அவர்களும் செய்கிறார்கள். தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை, தேச அந்தஸ்தை, சமஷ்டிக் கோரிக்கையை நிராகரித்துப் பெரும்பான்மை மக்கள் வழங்கும் ஆணை மூலம் எங்கள் மக்களை நசுக்கினால் நாங்கள் மாற்று வழிகளைத் தேடியே ஆக வேண்டும். அந்த மாற்று வழி ஆயுதப் போராட்டமல்ல. எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற ஒரு சர்வசன வாக்கெடுப்புக்கு வலியுறுத்தியே ஆக வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் குறைந்தது எங்களுக்குப் பத்து ஆசனங்களை வழங்கினால் இந்த விடயத்தில் நாங்கள் இறுக்கமாகச் செயற்படுவோம் எனவும் சூளுரைத்தார்.